Monday, September 20, 2010

பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !

பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !

அன்னை.
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அன்னை உண்டு. .
அன்னையின் அரவணைப்பை அண்டாதவர்கள் யாருள்ளார்கள்?
அன்னையின் அளவற்ற பாசத்தை வேண்டாதவர்கள் உண்டா?தாய்ப் பாசத்திற்கு நிகருண்டா?
தேசத்தைத் தாயாகவும், நதிகளை அன்னையாகவும், தெய்வங்களைக் கூட தாய் வடிவில் காண்கின்றோம்.
வேதங்கள் "மாத்ரு தேவோ பவ" என்றே முதலில் தாயைப் போற்றுகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னைக்கே முதலிடம்.
முப்பெரும் தேவர்கள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்.இவர்கள் மூவருக்கும் ஒரு சமயத்தில் அன்னையின் அரவணைப்புத் தேவையாக இருந்திருக்கின்றது.
பிரம்மா - இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை.
விஷ்ணு - அனாதியானவர். ஆதி என்று ஒன்று இல்லாதவர். பத்து அவதாரங்கள் எடுத்த போதிலும் அன்னையின் பரிபூரண அரவணைப்பைப் பெறாதவர். ராமாவதாரத்தின் போது ராமர் ராஜகுமாரனாக வளர்ந்ததனால், அன்னையிடம் இருந்ததை விட, மற்றவர்களிடம் இருந்ததே அதிகம். பெற்ற கோசலையை விட, கைகேயியையே தாயாக மதித்தவர். கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, பெற்ற தாயான தேவகியை விட, வளர்த்த யசோதையிடம் அதிக அன்பு பெற்றவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு விஷமங்கள் செய்வதற்கே நேரமிருந்தது. யசோதைக்கும் கிருஷ்ணரைக் கண்டிக்கவே நேரம் போதவில்லை.
சிவன் - இவருக்கும் பிறப்பு என்று ஒன்றே இல்லை. சிவன் சிலை வடிக்கும் போது, தொப்புள் இல்லாமலே சிவனை வடிப்பார்கள். ஏனெனில், இவர் எவருக்கும் பிறக்கவில்லை என்பதுதான்.
விஷ்ணு எடுப்பது அவதாரம் (பிறப்பு முதல் இறப்பு வரை உண்டு) எனில் சிவன் எடுப்பது அவஸரம் (பக்தர்களுக்கு காட்சி தந்து விட்டு மறைந்துவிடுதல்).சிவன் தாமே முன் வந்து "அம்மே" என்று அழைத்தது காரைக்கால் அம்மையாரை. அவரைப் பற்றி பிறகு பார்ப்போம்.
இந்த மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு இருந்தது. தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர்.
அவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள். அவள் அனசூயை.
அனசூயை - மஹா தபஸ்வினி. அத்ரி மஹரிஷியின் தர்ம பத்னி. அத்ரி மஹரிஷியின் தவத்தில் பெரும் உதவிகள் செய்து, தாமும் சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையுடன் இருந்தாள். அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தார்கள். அந்த வரத்தை மெய்ப்பிக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் அவர்களிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.
அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.
அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.
அநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர். அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.
நெடுநாட்களாக - பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை.
பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் - தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.
வெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.
இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது. அன்னையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள். அவர்கள் மூவரும், தங்களைத் தாயிடம் இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.
பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் - பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.
விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம்.
சிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன்பழமே சிவப் பழம்.
பிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.
அத்ரியின் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகாள இருந்த தம் கணவர்களை முப்பெருந்தேவியரும் அநசூயையிடம், தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அன்னைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை. பாசக் கயிறு குழந்தைகளையும், அன்னையையும் பிணைத்திருந்தது.
அநசூயை நெஞ்சம் கனக்க - பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள். அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.
மஹாவிஷ்ணு, அநசூயை பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், தன்னுடைய அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர்.
அவரே தத்தாத்ரேயர்.அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர்.
மூவரின் அம்சமும் கொண்ட தத்தாத்ரேயர் அத்ரி - அநசூயை தம்பதிகளிடம் வளர்ந்தார். அன்னையின் பாசம் முழுக்கப் பெற்றார். தந்தையின் ஞானம் அனைத்தையும் பெற்றார்.
உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானவான் ஆனார்.
ஸ்ரீ வித்யா உபாஸகர்களுக்கு, சாக்த உபாஸகர்களுக்கு தத்தாத்ரேயர் தான் பரமார்த்த குரு. ஏனெனில், தாயைப் போற்றும், தெய்வத்தைத் தாய் நிலையில் கொண்டு போற்றும், உலகமனைத்தையும் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றும் வகையில் அமைந்த ஸ்ரீ வித்யா உபாஸனையை உலகுக்குக் கொண்டுவந்தவர் தத்தாத்ரேயர்தான்.
தத்தாத்ரேயருக்கு பரம ஞான சக்தியாக விளங்குவது ஸாக்ஷ¡த் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே தான்.
தத்தாத்ரேயர் ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ நகர பூஜை அல்லது ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார். அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது.
தத்தாத்ரேயரின் பிரதான சிஷ்யராக விளங்கியவர் பரசுராமர். இந்த பரசுராமர் தத்த ஸம்ஹிதையை 6000 ஸ¥த்திரங்களாக தொகுத்தார். அதுவே பரசுராம கல்பம் எனப்பட்டது. தற்காலத்தில் அம்பிகைக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பரசுராம கல்பத்தை ஒட்டியே செய்யப்படுகின்றது.மேலும் ஸ்ரீ வித்யா உபாஸனை பற்றி அறிந்து கொள்ள நவாவரண பூஜை பதிவைக் காணவும். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்.
வடமொழியில் அமைந்த நக்ஷத்ர மாலிகா ஸ்லோகங்கள் தத்தாத்ரேயரைப் பற்றி பல சிறப்பம்சங்களைக் கூறுகின்றன.
தத்தாத்ரேயர் யோகியர்களுக்கும், ஞானிகளுக்கு ஒரு தூய வழிகாட்டியாக அமைந்துள்ளார். அவர் போதித்தது அனைத்தும் ஞானாம்சம் பெற வழிகோலுவது.

தத்தாத்ரேயர் வழிபட்ட மஹா திரிபுர சுந்தரியாக, பராபட்டாரியாக, லோகநாயகியாக, உலகமாதாவாக விளங்கும் ஸ்ரீ லலிதா தேவியின் ரூபமாக விளங்கும் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை வணங்குவோம்! வளம் பெறுவோம் !!

முப்பெருந்தேவியர்களையும் (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி) ஒருங்கே வழிபடவகை செய்யும் பெரும் விழாவாகிய நவராத்திரி விழாவினைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
- பி.கு. : - நேந்திரம் பழம் : சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன், தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான். இந்திர¨னைக் காணாமல் நெடுநேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான். தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான். இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு - தான் இந்திரன் இல்லை (ந: இந்திரன்) என்றது. இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்-
cell : 94434 79572





Thursday, September 9, 2010

சியமந்தக மணி

சியமந்தக மணி


(சென்ற பதிவுக்கு (விநாயகர் சதுர்த்தி) முந்தைய பதிவாகிய சங்கடஹர சதுர்த்தி எனும் பதிவில், விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு, தன் மேல் ஏற்பட்ட வீண் அபவாதத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நீக்கிக்கொண்டதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. அதை விரிவாகத் தெரிந்துகொள்ள அன்பர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்கண், இந்தப் பதிவு சியமந்தக மணி பற்றியது)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நாள் இரவில் நேரம் காண்பதற்காக விண்ணைக் காண்கின்றார். அங்கு வளர்பிறை நான்காம் நாள் நிலவு தெரிகின்றது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ்யத்தின் குறுநில மன்னராக யதுகுல வம்சத்தினன் ஆகிய சத்ராஜித் எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்தான். மிக ஏழ்மையான பகுதி அவனுடையது. ஏழ்மையில் இருந்தும் சூர்யபகவான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் சூர்யனை வழிபட்டுத்தான் மற்ற செயல்களைத் தொடங்குவது அவன் வழக்கம். வறுமை நீங்கவும், வாழ்வு செழிக்கவும் சூர்யனை தினமும் நினைந்து வழிபாடு ஆற்றியமையால், சூர்ய பகவான் அவனின் பக்தியை மெச்சி, அவன் முன் தோன்றி, தன் சூர்ய அம்சத்திலிருந்து ஒரு ரத்தினக் கல் எடுத்து அவனிடம் கொடுத்தார். அது சியமந்தக மணி எனப்பட்டது. அதன் சிறப்பம்சம் ஒவ்வொரு நாளும் அந்த சியமந்தக மணியிலிருந்து எட்டு பாரம் (எடையளவு) அளவு தங்கம் சுரந்து கொண்டேயிருக்கும்.
பக்தியின் பயனாக தான் பெற்ற சியமந்தக மணியை பயபக்தியுடன் பூஜைகள் செய்து வந்ததான் சத்ராஜித். அந்த மணியிலிருந்து பெற்ற தங்கத்தினைக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்திகொண்டான். தனது மக்களுக்கும் நல்வழியில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தான்.
ஒரு நாள் தனது சக்ரவர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணரைக் காணவும், இந்த மணியைப் பற்றி சொல்லவும் விழைந்தான். அந்த சியமந்தகமணியைத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு கிருஷ்ணரைக் காணச் சென்றான். துவாரகா நகர மக்கள் வினோத ரத்தினத்தைக் கட்டிக் கொண்டு வந்த சத்ராஜித், மணியின் அதீத பிரகாசத்தினால், ஒரு சூர்யனைப் போல வந்து கொண்டிருந்ததைக் கண்டு, கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணர் சத்ராஜித்தை அன்புடன் வரவேற்று உபசரித்தார். தான் பெற்ற சியமந்தகமணியைப் பற்றி கண்ணனிடம் விவரித்தான் சத்ராஜித். அதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அதன் சிறப்பம்சங்களை உணர்ந்து, அவனின் பக்தியைப் பாராட்டி, அந்த மணியைப் பாதுகாப்பாக வைத்திருக்க நினைந்து, அந்த மணி பாதுகாவல் நிறைந்த துவாரகாக் கோட்டையில் பூஜையில் இருக்கட்டும், ஒவ்வொரு நாளும் அதிலிருந்து சுரக்கும் தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
ஆயினும், சத்ராஜித் - தான் அரும்பாடுபட்டு தவம் செய்து பெற்ற மணியை பிறரிடம் கொடுக்க மனமில்லாதவனாக இருந்தான். கிருஷ்ணர் தன்னிடம் இருந்து சியமந்தக மணியை அபகரிக்க நினைக்கின்றாரோ என்று அச்சப்பட்டான்.
சத்ராஜித்தின் உள் எண்ணத்தை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், நீ பாடுபட்டு சேர்த்த பொருள் உன்னுடனே இருக்கட்டும் என்று சொல்லி அவனை வழியனுப்பி வைத்தார்.
ஊர் திரும்பிய சத்ராஜித்துக்கு கிருஷ்ணரை எண்ணி பயம் வந்தது. தன் மேல் படையெடுத்து மணியைப் பறித்துக்கொள்வாரோ என்று எண்ணி நடுங்கிக் கொண்டே இருந்தான். சத்ராஜித்துக்கு பிரசேனன் எனும் தம்பி இருந்தான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தான். அவன் என்ன கேட்டாலும் வழங்கும் எண்ணம் கொண்டிருந்தான் சத்ராஜித்.
ஒரு நாள், பிரசேனன் தன் அண்ணனிடம், தான் நண்பர்களுடன் வேட்டையாடச் செல்லவிருப்பதாகவும், அச்சமயம் தன்னிடம் சியமந்தக மணி இருந்தால் நல்லது என்றும் அண்ணனிடம் கூறினான்.
தன்னிடம் இருப்பதை விட தன் தம்பியிடம் சியமந்தக மணி இருப்பது கிருஷ்ணரிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி பிரசேனனிடம் மணியைக் கொடுத்தான்.
சியமந்தக மணியை அணிந்த பிரசேனன், அதற்குரிய பூஜனைகளை மறந்து, அதைக் கட்டிக்கொண்டிருந்ததால் மேன்மையானவன் என்ற அகங்காரம் கொண்டு, நண்பர்களுடன் உற்சாகமாக வேட்டையாடினான். ஒரு சமயம் பிரசேனன், தன் நண்பர்களிடமிருந்து பிரிந்து கானகத்தின் நடுவே சென்றுகொண்டிருக்க, அங்கே எதிர்பாராமல் வந்த சிங்கம் ஒன்று, பிரசேனனையும், அவனின் குதிரையையும் கொன்று, அவன் அணிந்திருந்த மணியை கவ்விக்கொண்டு சென்றுவிட்டது.
அந்த கானகத்தில் ராஜ்யம் செய்துகொண்டிருந்த ஜாம்பவான் (ராமாயணத்தில் வரும் கரடி ராஜா, யுகங்கள் தாண்டிய வயதைக் கொண்டவர்) சியமந்தக மணியைக் கவ்விக்கொண்டிருந்த சிங்கத்தை வென்று, அதனைக் கொன்று, அந்த மணியைத் தன் குழந்தைக்கு விளையாடக் கொடுத்துவிட்டார்.
காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தன் தம்பி பிரசேனன் நெடு நாட்களாகியும் திரும்பாததைக் கண்டு மனம் கலங்கியிருந்தான் சத்ராஜித். ஒரு நாள் அவன் நண்பர்கள் பிரசேனன் நடுக்காட்டில் இறந்து விட்டதையும், அந்தக் கல் காணாமல் போனதையும் வந்து சொன்னார்கள்.
கிருஷ்ணர்தான், அந்த சியமந்தக மணி மேல் ஆசைப்பட்டு, தன் தம்பியைக் கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணி, கிருஷ்ணர் மீது அவதூறைப் பரப்பிவந்தான்.
கிருஷ்ணர் இந்த அவச்சொல்லைக் கேட்க நேர்ந்தது. தன் மீது ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்கிக் கொள்ள ஆவலானார்.

(கிருஷ்ணர் வளர்பிறை சதுர்த்தியில் இரவில் நிலவைப் பார்த்ததால் ஏற்பட்ட இடர்தான் இவ்வளவுக்கும் காரணம் என நாரதர் கூற, அவப் பெயர் நீங்க, விநாயகரை தேய்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபடச் செய்தார். விநாயகரும், கிருஷ்ணர் மேல் படிந்த கெட்ட பெயரை நீக்க திருவுள்ளம் கொண்டு அருள்பாலித்தார். தன் சங்கடங்கள் யாவும் நீங்க விநாயகரை வழிபட்ட தினம் தேய்பிறை சதுர்த்தி (நான்காம்) தினம். )

கிருஷ்ணர் தன் கெட்டபெயரை நீக்கிக் கொள்ள, பிரசேனனின் நிலையைக் காண கானகம் சென்றார். பிரசேனன், குதிரை, சிங்கம் ஆகியன இறந்த நிலையை அறிந்த கிருஷ்ணர், அடர்கானகத்தில் ஒரு இடம் மட்டும் அதிக பிரகாசமாக இருப்பதைக் கண்டு அந்த இடத்தை நெருங்குகின்றார்.
அங்கே ஒரு குகையில், ஜாம்பவானின் மகளாகிய ஜாம்பவதி தன் தம்பியைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். ஜாம்பவதி அறிவில் சிறந்தவள். புத்தி கூர்மை மிக்கவள். கிருஷ்ணர் சியமந்தகமணியைத் தேடித்தான் வருகின்றார் என்பதை அறிந்து, குழந்தையைத் தாலாட்டுவது போல பாடினாள்.

"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:"

"சிங்கம் பிரசேனன் என்பவனைக் கொன்று மணியைக் கவர்ந்தது. அந்த பலம் மிகுந்த சிங்கத்தை, மஹா பலம் பொருந்திய ஜாம்பவான் ஆகிய உன் தந்தை கொன்று, அந்த மணியைப் பெற்றார். அந்த மணியோ இப்பொழுது உன்னிடம்" என்று பொருள் பதிய பாடினாள்.

கிருஷ்ணர் இந்தப் பாடலைக் கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி வந்தார். அந்தக் குகைக்குள் நுழைந்து மணியை எடுக்க நினைக்க, யாரோ ஒரு அந்நியன் தனது குகைக்குள் வந்து பிரகாசமான மணியைக் கவர நினைக்கின்றாரோ என்று எண்ணிய ஜாம்பவான், கிருஷ்ணரை தாக்கினார்.

இதை எதிர்பாராத கிருஷ்ணர் ஜாம்பவானின் தாக்குதல்களை மிக எளிதாகக் கையாண்டார். ஒவ்வொரு முறையும் ஜாம்பவான் கிருஷ்ணரைத் தாக்கும் போதும் ஏதோ ஒரு அருமையான பழைய பந்த உணர்வு ஜாம்பவானுக்குத் தோன்றியது.

இருந்தபோதிலும் கிருஷ்ணரை உணராத ஜாம்பவான் தாக்குதல்களை மேலும் பெருக்கினார். ஆயினும், மஹா பலசாலியாகிய ஜாம்பவானின் தாக்குதல்களை, மிக எளிதாக எதிர்த்து, அதே சமயம் ஜாம்பவானை தலைக்கு மேல் சுற்றி சுவற்றில் எறிந்தார். ஜாம்பவானுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மஹா பலவானாகிய தன்னை ஒருவர் மிக எளிதாக தாக்குகின்றாரே என்ற எண்ணம் கொண்டு, தனது புஜ பலத்தை நம்பி, கிருஷ்ணரை தனது கைகளால் தாக்குகின்றார்.

இருவரும் கட்டிப்பிடித்து சண்டை போடுகின்றனர். ஆலிங்கனம் செய்து சண்டையிடும் போது ஜாம்பவானையும் அறியாமல் மெய்சிலிர்த்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதே போன்றதொரு சமயம், ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமர், சீதையை மீட்டதற்கு நன்றியாக, ஜாம்பவானை ஆலிங்கனம் செய்திருந்தார். அந்தக் கணம் இப்பொழுது கிருஷ்ணரைத் தாக்க தழுவியபோது தெரிந்தது. அவரையும் அறியாமல் 'ராம, ராம' என்றார். நிலமையை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் தனது தோற்றத்தை நீக்கி, ராமச்சந்திர பிரபுவாக ஜாம்பவானுக்குக் காட்சியளித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஜாம்பவான், கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, சியமந்தக மணியை அவரிடம் கொடுத்து, தனது மகளாகிய ஜாம்பவதியை அவருக்கு மணம் முடித்து வைத்தார்.
சியமந்தக மணியுடன் வந்த கிருஷ்ணர், நேராக சத்ராஜித்திடம் சென்று, அந்த சியமந்தக மணியை அவனிடம் கொடுத்து, உன் பொருள் உன்னோடு இருக்கட்டும் என்று கூறி, நடந்ததையெல்லாம் விவரித்தார்.

சத்ராஜித்துக்கு கிருஷ்ணர் மீது பெரும் பக்தி உண்டு. ஆயினும், தன் பொருள் மீது அவர் ஆசை வைத்தாரோ என்று எண்ணியது தன் தவறு என்று எண்ணி, மிகவும் வருத்தம் கொண்டு, கிருஷ்ணர் பெயருக்குத் தாம் பெரும் களங்கம் செய்துவிட்டோமே என்று நினைந்திருந்தான். தான் செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக, தன் மகள் பாமாவை கிருஷ்ணருக்கு மணம் முடித்துவைத்தான்.
சியமந்தக மணி பிரச்சனை பாமாவின் திருமணத்தோடு முடியவில்லை. பாமாவைத் திருமணம் செய்யக் காத்திருந்த சததன்வா என்பவன், ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாமாவை மணம் முடித்துக் கொடுத்த சத்ராஜித் மேல் கோபம் கொண்டு, கிருஷ்ணர் இல்லாத நேரமாகப் பார்த்து, சத்ராஜித் மீது படையெடுத்து, சத்ராஜித்தைக் கொன்று, சியமந்தக மணியைப் பறித்து வந்துவிடுகின்றான்.
கிருஷ்ணர் துவாரகையை அடைந்தவுடன் நடந்ததை அறிந்து சததன்வாவைத் தாக்க, தனது அண்ணனாகிய பலராமனுடன் செல்கின்றார்.
கிருஷ்ணர் தன்னைத் தாக்க வருகின்றார் என்று அறிந்த சததன்வா, அந்த மணியை தனது தம்பியாகிய அக்ரூரர் என்பவரிடம் (அக்ரூரர் - மஹா தபஸ்வி. மேன்மையானவர். கிருஷ்ண பலராமரிடத்தில் பேரன்பு கொண்டவர். யமுனா நதியின் அடியிலேயே கிருஷ்ண பலராமர்களை தெய்வங்களாக உணர்ந்து கண்டுகொண்டவர்) கொடுத்துவிடுகிறான்.
அவர் தவம் செய்வதற்காகக் காசி நோக்கிச் சென்று விடுகின்றார்.
கிருஷ்ணர் சததன்வாவைத் தேடிச் சென்று அவனைக் கொன்று விடுகின்றார். ஆனால் அவனிடம் சியமந்தக மணி இல்லை. வெறும் கையுடன் திரும்பி வந்த கிருஷ்ணர் மீது பலராமரே சந்தேகப் படுகின்றார்.
பிறகு, அந்த மணி அக்ரூரரிடம் இருப்பதை அறிந்து அவரை நோக்கிச் செல்ல, அக்ரூரர் சியமந்தக மணியை கிருஷ்ணரிடம் சமர்ப்பித்தார். ஆனால், கிருஷ்ணர் தபஸ்வியாக விளங்கும் அக்ரூரரிடம் இருப்பதே நல்லது என்று அவரிடமே திருப்பித் தந்துவிடுகின்றார்.
இப்பொழுது, கிருஷ்ணர் மீதிருந்த அவப்பெயர் முற்றிலுமாக நீங்கப் பெற்றது.

பாகவதத்திலும், விஷ்ணு புராணத்திலும் சியமந்தக மணியைப் பற்றி விரிவாக விவரிக்கப்படுகின்றது. பல இடர்கள் தந்த அந்த மணியை கிருஷ்ணர் திரும்பவும் சூர்யபகவானிடமே சேர்ப்பித்து விட்டார் என்றும், அந்த மணியை பூமியில் ஓங்கி அடித்துப் புதைத்துவிட்டார் என்றும், பாண்டவர்களின் வம்சத்தினன் ஆகிய பரீக்ஷித்து மஹாராஜாவிடம் அந்த மணி சேர்க்கப்பட்டது என்றும் பல உப புராணங்கள் கூறும்.


நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடு என்பார்கள். அது இந்த சியமந்தகமணி சம்பவத்தை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டது.

ஒருவேளை நான்காம் பிறையைப் பார்க்க நேர்ந்தால், பாகவதத்தைப் படித்தாலோ அல்லது ஜாம்பவதி சொல்வதாக அமையக் கூடிய

"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:" - என்ற (சியமந்தக உபாக்யானம்) ஸ்லோகத்தைச் சொன்னால் விமோசனம் கிடைக்கும் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.

கிருஷ்ணர், தேய்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டதால் களங்கமும், சங்கடமும் நீங்கியதாகவும், அதுமுதல் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியத்துவம் பெறலாயிற்று. ஆகவே அந்த தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்பட்டு, அன்றைய தினத்தில் விநாயகருக்கு உரிய வழிபாடுகள் செய்வது, வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க வழிசெய்யும்.


பார்கவ புராணம் - ஸ்ரீ கிருஷ்ணர் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்து சங்கடங்களை நீக்கிக் கொண்டதாகக் கூறுகின்றது.


சங்கடஹர சதுர்த்தி அன்று சக்தியின் மைந்தனாகிய விநாயகரைப் பணிந்து வழிபாடு செய்வோம் ! சங்கடங்கள் யாவும் நீங்கப் பெறுவோம் !!

அடுத்த பதிவில் பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் பற்றிக் காண்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- yanthralaya@yahoo.co.in-

yanthralaya@gmail.com-

cell : 94434 79572