Tuesday, October 19, 2010

மஹா அன்னாபிஷேகம்

மஹா அன்னாபிஷேகம் (ஐப்பசி மாத பெளர்ணமி)
http://natarajadeekshidhar.blogspot.com/2010/10/22102010.html
அன்னம்.
உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம். வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன.
தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.
அன்னம் ப்ராணாவோ அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது.
அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.
தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக - தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.
ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும் தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
அன்னம் எனும் ஹவிர் பாகத்திற்காகப் பெரும் சண்டையே நடந்திருப்பதைப் புராணங்கள் அனேகம் பகர்கின்றன. சிவனுக்குரிய ஹவிர் பாகத்தைத் தர மறுத்த தக்ஷனின் தலையைக் கொய்திருக்கின்றார் வீரபத்திரம் வடிவம் கொண்ட சிவன்.
இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.
தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.
சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம்.
ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன. சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான். http://natarajadeekshidhar.blogspot.com/2010/10/22102010.html
அண்டம் முழுக்க சிவ வடிவம் தான்.
சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.
சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தை, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.
சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு. ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
http://natarajadeekshidhar.blogspot.com/2010/10/22102010.html
அவை,
மாதம் - அபிஷேகப் பொருள் - பலன்
சித்திரை பௌர்ணமி - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி பௌர்ணமி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமி - முக்கனி = மா, பலா, வாழை - கேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி பௌர்ணமி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் - கல்வி, கலை தேர்ச்சி, ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமி - பசு நெய் & நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமி - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமி - பசுநெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம் பங்குனி பௌர்ணமி - பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று தமிழ் திருமுறைகள் போற்றும் - சிதம்பரம் ஸ்ரீ ஆதி மூலநாதர் சிவலிங்கத்திற்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மேற்கண்ட முறையில் விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

தவக்கனல், அருட்புனல், மண்ணில் வாழ்ந்த, சிவ வடிவாகவே கருதப்படும் காஞ்சி மஹா பெரியவரின் அருளாணையின் படி, பல்வேறு சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.
அதில் மிக முக்கியமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் எனும் பெரும் சிவ வடிவத்திற்கு நூற்றுக்கணக்கான மூட்டைகள் அரிசி கொண்டு, பெரும் வடிவமாகிய சிவபெருமான் முழுக்க நிறைந்திருக்கும்படி மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, அந்த அன்னம் முழுக்க அன்னதானம் செய்யப்படும்.
அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.
அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!

எவரும் செய்யத் துணியாத வகையில் அன்னதானம் செய்தவர் பற்றியும், அன்னதானத்தின் பெருமையையும் காண கீழ்க்கண்ட லிங்க் செல்ல்லுங்கள்.  http://natarajadeekshidhar.blogspot.com/2010/11/blog-post.html

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
www.facebook.com/deekshidhar
cell : 94434 79572.

Saturday, October 2, 2010

நவராத்திரி










நவராத்திரி பூஜை
(26.09.2022 - 05.10.2022)
சரஸ்வதி பூஜை (04.10.2022)
விஜயதசமி (05.10.2022)


சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.
நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.

விஜய தசமி - வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.

வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.

பெண்களின் பெருமையைப் போற்றும் விழா, நவராத்திரி விழா.
பெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.

நவராத்திரி சமயத்தில் வீட்டில் "கொலு" என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும்.

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.

நவராத்திரி வழிபாட்டால்,
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

நவராத்திரிகள் கொண்டாடப்படும் காலங்கள் :
சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.

புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு :
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.
புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.

சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.

தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவகன்னிகா வழிபாடு
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.

அதன்படி,
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோஹிணி
ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்கா
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா
என்று வணங்கப்படுவார்கள்.
(நவகன்னிகா ஸ்லோகங்கள் (தமிழ் விளக்கத்துடன்) தேவைப்படுவோர் மெயில் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்)

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.

துர்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].

நவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.

சரஸ்வதி பூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.

சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூTப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.

விஜய தசமி:
ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி

ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.

இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.

சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.

ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.

நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

புராணங்களில் நவராத்திரி :
வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.
பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

நவராத்திரி புராணம் :
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூSதையாய் புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

மற்றொரு கதை:
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.

சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.

காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.

நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்

நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
ஒன்பது படிகள் :
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

நவராத்திரியில் உகந்தவை
(இந்த அட்டவணையை க்ளிக் செய்தால் விபரம் பெரிதாகத் தெரியும்)












நெய்வேலி நகரம், ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயத்தில் சாரதா நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அம்பிகைக்கு அபிஷேகம், ஒவ்வொரு நாளிலும் சிறப்பு அலங்காரங்கள், மாலை ஸஹஸ்ரநாம அர்ச்சனை, நவாவரண பூஜை, மஹா தீபாராதனை நடைபெற இருக்கின்றது.
விஜய தசமி அன்று சிறப்பான முறையில் ஹோமமும் நடைபெறும்.

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !!

தொகுப்பு :
நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
செல் : 9443479572, 9362609299
MAIL : yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.in