Saturday, December 18, 2010

பூச்சரம்

பூச்சரம்
“ஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை” எனும் தலைப்பிலான வலைப்பூ (blog) ஆரம்பித்து இன்று (18.12.2010) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
ஒவ்வொரு கட்டுரையும் அரும்பு போல அமைந்து, அவையனைத்தையும் கோர்த்தால் வரும், வாசம் மிக்க மலர் மாலை போல, இக்கட்டுரைகள் அனைத்தும் இறைவனுக்கு ஆன்மீக மாலையாக அமையும் வண்ணம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு எழுதப்படுகின்றது.
இறைவனின் துணைகொண்டு,
அமரரான என் தந்தையின் வழிநின்று,
அன்பர்களின் பலரின் வழிகாட்டுதலில்,
அடியேன் அறிந்த ஆன்மீக விஷயங்களை அனைவருக்கும் அறிவிக்கும் எண்ணத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
(கதம்பம் எனும் பதிவைக் காணவும்)
வலைப்பூ (blog) ஆரம்பப்பிதற்கு முன் பல வருடங்களாக, ஆன்மீகக் கட்டுரைகளை பல பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.
அவற்றை வலையேற்ற தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்களிடம் பேசநேர்ந்தது.
அச்சமயம், வியதீபாத தரிசனம் எனும் கட்டுரையை அவரின் blog-ல் பதிவிடக் கேட்டுக்கொண்டேன்.
எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அக்கட்டுரையை அவரின் blog-ல் பதிவிட்டார். அது தான் எனக்கு முதல் தொடக்கமாக இருந்தது.
அதன்பின், தனியாகவே ஒரு வலைப்பூ ஆரம்பிக்க ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தக்க வழிகாட்டினார்கள்.
வலைப்பூ ஆரம்பித்தாகிவிட்டது. அடியேன் எழுதியிருந்த பல கட்டுரைகளை ஒவ்வொன்றாக இணையத்தில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், இதுவரை அவற்றில் சிலவற்றையே பதிவிட்டிருக்கின்றேன்.
நண்பர்களின் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒவ்வொரு மாதமும் நிகழும் முக்கியமான ஆன்மீக நிகழ்வுகள் சம்பந்தமாகவும், தமிழ் இலக்கியம் சார்ந்தும், அடியேன் ரசித்த விஷயங்களையும் எழுத ஆரம்பித்தேன்.
ஆன்மீக சம்பந்தமான நண்பர்கள் பலர் கிடைத்தார்கள்.
அவர்களின் கேள்விகள், ஆலோசனைகள், மேலும் பல விஷயங்களைத் தேடச் செய்தது.
ஆகவே அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
வலைப்பூவிற்கு விஜயம் செய்த அத்துணை பேருக்கும் அனேக நன்றிகள்.
வலைப்பூவிலிருந்து சில தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளை, மதிப்பு மிகுந்த “ஞான ஒளி” (ஆன்மீக மாத இதழ் - தபோவனம், ஞானானந்த மிஷன் வெளியீடு) எனும் அற்புதமான புத்தகத்தில் வெளியிடுக்கொண்டிருக்ன்றார்கள்.
அப்பத்திரிகையின் ஆசிரியர் என்.ஆர். ரங்கநாதன் அவர்களுக்கு அனேக நன்றிகள்.
மாதம் மூன்று கட்டுரைகள் வீதம் எழுத நினைத்திருந்தேன்.
அதற்கு சற்றே ஒரு சிறு ஓய்வு கொடுக்க எண்ணியிருக்கின்றேன்.
சிறிது காலத்திற்குப் பிறகு தொடர்ந்து கட்டுரைகளை எழுதலாம் என்றிருக்கின்றேன்.
இது நாள் வரை எழுதிய கட்டுரைகளின் தலைப்புகளை தனித்தனி hyperlink ஆக கொடுத்திருக்கின்றேன்.
அத்தலைப்புகளின் மீது க்ளிக் செய்தால் அக்கட்டுரை விரியும்.
ஆன்லைனில் படிக்க இயலாதவர்கள், டவுன்லோடு செய்து ஆ•ப்லைனில் படிக்க வசதியாக அனைத்துக் கட்டுரைகளையும் (சற்றே திருத்தியமைத்து) ஒரே FILE ஆக PDF FORMAT –ல் இங்கே கொடுத்திருக்கின்றேன்.
இத்தொகுப்பை அச்சிடவும் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கின்றேன்.
அன்பர்கள் வழக்கம்போல் தமது கருத்துக்களைக் கூறி, இந்த blog மேலும் சிறப்படைய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவருக்கும் அனேக நன்றிகள்.
எனது முந்தையக் கட்டுரைகள் :
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை கதம்பம், கால கணிதம் (1,2,3,4 & 5), காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1), ஆனித் திருமஞ்சனம் (2010) திருவள்ளுவர் கண்ட திருநடனம், ஆஷாட நவராத்திரி, அருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ! ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2), விநாயகர் சதுர்த்தி - 2010 மஹா சங்கடஹர சதுர்த்தி, ஆடிப் பூரம் - வளையல் அலங்காரம், நமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்), பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !, சியமந்தக மணி, மஹா அன்னாபிஷேகம், நவராத்திரி, அன்னதானம் திருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், சங்காபிஷேகம்,
என்றும் அன்புடன் நி.த. நடராஜ தீக்ஷிதர் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை நெய்வேலி, ஸத்சங்கம் – மணித்வீபம் பூஜகர் செல் : 94434 79572 Mail : yanthralya@yahoo.co.in, yanthralaya@gmail.com

Wednesday, December 1, 2010

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் (11.01.2017 -  புதன் கிழமை)

சிதம்பரம்.
ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.
சிதம்பரத்தின் மஹோத்ஸவங்களில் மிக முக்கியமானதும், மணி மகுடம் போன்றதும் விளங்குவது மார்கழி ஆருத்ரா தரிசனம்.
கைலாய மலை பனி படர்ந்தது. அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த, பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு.
மார்கழி ஆருத்ரா தரிசன தினத்தின் மதியப் பொழுதில் (ஸ்ரீ நடராஜ ராஜர் - பகல் வேளையில் தான் தன் கணங்கள் அனைத்தோடும் வந்திறங்கினார்) சித்ஸபா பிரவேசம் எனும் பொன்னம்பலம் புக்கும் காட்சியே - பெரும் புண்யங்களை அளிக்க வல்லது.
மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (02.01.2017 - காலை 6.30க்கு மேல் 07.15 மணிக்குள்) அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.
ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.
தங்கத்தினாலான மஞ்சம் (02.01.2016),
சந்திர பிரபை (03.01.2017),
சூர்ய பிரபை (04.01.2017),
பூத வாகனம் (05.01.2017),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான் என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது - 06.01.2017),
யானை வாகனம் (07.01.2017),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது - 08.01.2017) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (09.01.2017) பிக்ஷாடனராக வலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (10.01.2017) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (11.01.2017) - ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம்.
மறுநாள் (12.01.2017) - முத்துப்பல்லக்கில் வீதியுலா.

மாணிக்க வாசகர் தரிசனம் :
சமய நால்வர்களில் முக்கியமானவர், காலத்தால் முந்தையவர் ஸ்ரீ மாணிக்கவாசகர். பாண்டிய மன்னரின் மந்திரியாக பதவி வகித்து, கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்டு, பெரும் சிவத் தொண்டு ஆற்றியவர்.
இவருக்காகவே, சிவபெருமான் நரிதனை பரியாக்கி, வைகையை பெருக்கச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்து - போன்ற திருவிளையாடல்களை நிகழ்த்தியவர்.
இறைவனாலேயே மணிவாசகர் என்று போற்றப்பட்டவர். தில்லையின் அம்பலத்தினுள்ளே இரண்டறக் கலந்தவர். இவரின் திருவாசகத்துக்கு உருகாதவர் யாருமில்லை. திருவாசகம் - நெஞ்சை நெக்குருகச் செய்யும் விதத்தில், ஒவ்வொரு வாசகமும் மாணிக்கம் போன்ற அழகுற அமைந்தமையால், மாணிக்கவாசகர் என்று போற்றப்படுபவர்.
இவர் எழுதிய திருவெம்பாவை - மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பாக பாடப்பெறும். சிதம்பரத்தில், மாணிக்கவாசரின் தனிச்சிறப்பு மிக்க மாணிக்கவாசகர் விக்ரஹத்திற்கு இந்த மஹோத்ஸவ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இங்கு மட்டுமே மாணிக்க வாசகரின் - கைகள் மற்ற ஆலயங்களில் உள்ளது போல் அல்லாமல், தெய்வங்களுக்கு உரிய சின் முத்திரையோடு அமைந்திருக்கும். இங்கு மட்டுமே மாணிக்கவாசகர் தெய்வத்திற்கு நிகராக கருதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறார்.
மார்கழி மஹோத்ஸவத்தின் பத்து தினங்களிலும், மாணிக்க வாசகர் தனி மஞ்சத்தில் எழுந்தருளிச் செய்து, பொன்னம்பலத்திற்கு அடுத்த கனகசபையின் வாசலில், ஸ்ரீ நடராஜருக்கு எதிரே நிற்கச் செய்து, மிக சிறப்பான வழிபாடுகள் செய்யப்படும்.
மாலை வேளை சாயரக்ஷை எனும் ஸாயங்கால கால பூஜை முடிந்த பிறகு, மாணிக்க வாசகருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும்.
அவருடைய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடல் முடிவிலும் சிறப்பு நிவேதனங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும்.
இருபத்தோரு தீபாராதனைகளோடு நடைபெறும் இக்காட்சி மாணிக்கவாசகர் தீபாராதனை என அழைக்கப்படும்.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த பூஜையைக் காண எண்ணற்ற பக்தர்கள் பார்த்து மகிழ்வார்கள்.
மறுநாள் காலை பஞ்சமூர்த்திகள் (ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர்) திருவீதி வலம் வரும்போது, மாணிக்க வாசகர் ஸ்ரீ ஸோமாஸ்கந்தரை வணங்கியவாறே பின் நோக்கி வலம் வரும் காட்சி மிகவும் அற்புதமானது.தேர்த் திருநாளின் அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக - சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.
தேர் மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திர முறைப்படி சக்கரங்கள், ஆர் தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலியவற்றால் ஆனது. தேரிலுள்ள மர சிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது. சிவலீலைகளின் காட்சிகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கும். தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் நடராஜர் அமர்த்தப்படுவார்.தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.
நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும்.
நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு. தேர் தரிசன உத்ஸவத்தில் மட்டுமே பின் தோற்றத்தை கண்டு ரசிக்கமுடியும்.
கருநிற இரண்டு (நடராஜர் & சிவகாமசுந்தரி) தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்ற திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது.பொதுவாக இலக்கியங்களில், தெய்வங்களை யானைக்கு ஒப்பிடுவது இயல்பானது. யானையின் காலைப் பிடித்தால் தான் அதன் உதவியோடு தலையில் ஏறமுடியும். அதுபோல தெய்வத்தின் காலடியில் சரணடைந்தால் மிக உயர்ந்த இடமாகிய மோட்சம் கிடைக்கும் என்பதை உணர்த்தவே தெய்வங்களை யானைக்கு உருவகப்படுத்துகின்றனர்.
யானையின் வளைந்த காலைப் பிடித்து அதன் தலையில் ஏறுவதைப் போல, நடராஜரின் வளைந்த திருப்பாதமாகிய குஞ்சிதபாதத்தை சரணடைந்தால், மிக உயரிய பேறு கிடைக்கும் என்பது திண்ணம்.
மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும்.
சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.
தேரிலேயே சாயரக்ஷை - மாணிக்கவாசகர் தீபாராதனை விசேஷ நிவேதனங்களுடன் நடைபெறும்.
தேரிலிருக்கும் தெய்வங்கள் கோயிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீக்ஷிதர்கள் நின்று, ஏக கால லக்ஷார்ச்சனை நடைபெறும்.
ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.
அதன் பின், ருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
தில்லையில் திருநடம்புரியம் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.
வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- Mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar
- Cell : 94434 79572, 93626 09299..